Pages

Sunday, December 4, 2011


வெள்ளிவிழா கொண்டாட்டம்


இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 21 ஜனவரி 2012 அன்று கோவிந்தகுடி யூத் வேல்பைர் மெட்ரிக் பள்ளியின் 25 வது ஆண்டு விழா கொண்டாட உள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 


மற்றும் நற்பணி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், இந்நாள் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள், குறிப்பாக இந்த அமைப்பு நன்றாக வளர வேண்டும் என என்றென்றும் விரும்பும் உள்ளூர் வெளியூர் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் பேராதரவையும் அன்புடன் வரவேற்கிறோம்.


வாழ்த்துக்கள் மற்றும் விமர்சனம் வரவேற்க்கபடுகின்றது

ywms.silverjubilee@gmail.com
வெள்ளிவிழா குழு

Saturday, July 23, 2011

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்!


அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்! 
ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்! 
இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்! 
ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்! 
உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்! 
ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்! 
எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்! 
ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்! 
ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்! 
ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்! 
ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...
நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது. அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச் செல்ல அண்மையில் வந்துகொண்டிருக்கிறது. 
ஏக வல்லோன் அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் மேலதிக வணக்க வழிபாடுகள் செய்ய வழிவகுக்கும் வரப்பிரசாதம் இந்த ரமழான். 
இறை நம்பிக்கைக் கொண்டோர் தம் உள்ளங்களால் எண்ணிய அனைத்து நற்செயல்களுக்கும் வழிதிறக்கும் அற்புத மாதம். 
இறைவனிடம் அருள் வேண்டும் முதல் பத்து தினங்களை உள்ளடக்கிய அருள் மாதம் அழகாக வருகின்றது. 
பாவ மன்னிப்பு கோரும் நெஞ்சங்களில் பால்வார்க்கும் புண்ணிய மாதம் இரண்டாம் பத்து தினங்களுடன் புதையலாக வருகின்றது. 
நரக நெருப்பின் விடுதலையை வேண்டி நிற்கும் நல்லோர்களின் நம்பிக்கை மாதம், 
சுவனத்தில் நுழைய துடிக்கும் சுந்தர நபிகளின் உம்மத்துகள் சுற்றும் சூழ காண துடிக்கும் சூப்பர் மாதம் 
முத்தான மூன்றாம் பத்து தினங்களுடனே முன்னறிவிப்புடன் வருகின்றது.

உள்ளத்தால் அன்பை விதைத்து, உடலால் பணிவை வெளி கொணர்ந்து மக்களிடம் கருணையை அறுவடை செய்யும் காலம் ரமழான் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். 
ஆன்மீக பயிற்சிக்கு அடிகோலும் அற்புத வாய்ப்பை அள்ளி வழங்கிடும் மாதம்! 
இறைவனின் வற்றாத கருணையான ரஹ்மத்தையும், ஊற்றுக்கண்ணாக விளங்கும் பரக்கத்தையும் ஒருசேர வாரி வழங்கிடும் வள்ளல் மாதம். 
செய்த குற்றங்கள் சிறியதாயினும், பெரியதாயினும் மன்னிப்பின் வாசல் திறக்கப்பட்டு பாவிகளுக்கு பாவமன்னிப்பு பகிர்ந்திடும் படைத்தவனின் மாதம். 
நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற நம்முடைய இருகரமேந்திய பிரார்த்தனை அவசியம், அப் பிரார்த்தனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடியாக பதிலளிக்கப்படும் பண்புள்ள மாதம். 
நாம் படைக்கப்படுவதற்கு முன்னர், மனிதனையா படைக்கப் போகிறாய்? என்று ஆச்சரிய வினா தொடுத்த வானவர்கள் நம் செயல்களைக் கண்டு, வியந்து இறைவனிடம் பெருமை பாராட்டி பெருமிதப்படுத்தும் பேருள்ள மாதம். 
நம்மை வழிகெடுக்கும் நாசகார, தீய சக்திகளான ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு கொட்டிலில் அடைக்கப்படும் காருண்ய மாதம். 
இணையில்லா இறைவனின் எல்லையில்லா கூலி வழங்கப்படும் மாதம். 
நோன்பாளிகள் மட்டும்... என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ள உயர்தர சுவனத்தில் நாம் நோன்பாளி என்ற பெருமையுடன் நுழைய வைக்கும் மாதம். 
சுகந்த காற்று வீசும் வசந்த கால திறப்பு போல சுவனக்காற்றை வீச வானங்கள் மற்றும் சுவனங்களின் திறப்பு விழா நடைபெறும் விழாக்கா(கோ)லம். 
கோடைகால வெப்பத்தையே தாங்க முடியாத நமக்கு நரகத்தின் கொடுமையை தாங்க முடியுமா? அதற்கு முடிவுகட்டும் விதமாக முடிவில்லாத முன்னவன் அல்லாஹ்வின் முன்னேற்பாடு தான் இந்த ரமழான். ஆம்! இந்த வசந்த காலத்தில் நரகச்சூடு நம்மைத் தொட அனுமதியில்லை. எங்கும் எப்போதும் சுகம்! அதுதான் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம்!! அதற்காகத்தான் இந்த மாதத்தில் மூடப்படும் நரகம்!!! 
ஓராயிரம் இரவுகள் விழித்திருந்தால்தான் ஒருசில நன்மைகளை பெற முடியும் என்ற வாழ்க்கைச் சூழலில் ஓரிரவு விழித்திருந்தாலே போதும் ஓராயிரம் இரவுகள் செய்த செயல்களுக்குண்டான நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற சுபச் செய்தியுடன் லைல(த்)துல் கத்ர் என்ற புதையலை தன்னுள் வைத்திருக்கும் அருள் சுரங்கம். 
வாடிய பயிரை கண்டபோது வாடுவதை விட அதற்கு தண்ணீர் வார்ப்பது மேலான செயல் என்பது போல வறியோருக்கும், எளியோருக்கும், இல்லாதோருக்கும் வாரி வழங்கி கொடைத்தன்மையையும், வள்ளல் குணத்தையும் வாஞ்சையுடன் கற்றுத்தரும் வளமிகு மாதம். 
நாம் மட்டும் நன்மைகள் பல செய்து, தீமைகளை விட்டும் தவிர்ந்திருந்தால் போதுமா? பிறருக்கும் நல்லவற்றை போதிக்க வேண்டாமா? தீமையை விட்டும் தடுக்க வேண்டாமா? அந்தப் புனிதப் பணியை வழங்கும் பயிற்சிக்களம்தான் இந்த ரமழான். 
அடுத்தவருக்கு அநீதி இழைத்தல் ஆபத்தானது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும் அழகிய மாதம். 
பிறரின் தேவைகளை அறிந்து முடிந்தளவு உதவிகள் புரிய உள்ளத்தில் உதவிப்பண்பை ஊற்றெடுக்க வைக்கும் உன்னத மாதம். 
கஸ்தூரி மணம் கமழும் மணப்பொருளை விட நோன்பாளியின் வாய் வாடை வல்லோன் விரும்பும் வாசனை என்பதை வலியுறுத்தும் வசந்த மாதம். 
உலக காரியங்களில் போட்டியிட்டால் வெற்றியாளர் ஒருவரே! மற்ற அனைவரும் தோல்வியுற்றோர் என்பது நாம் அறிந்த நியதி. ஆனால், இம்மாதத்தில் நற்செயல்களில் போட்டியிடுவோர் அனைவரும் வெற்றியாளர்கள் என்பதும், தோல்வியில்லா வாழ்க்கையும், துவண்டு போகாத நிம்மதியும் கிடைக்கும் என்பதும் வெற்றியளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி என்பதை உணர்த்தும் மாதம். 
வழிபாடுகள் என்ற குறைவான மூலதனம். இறைபொருத்தம் மற்றும் சுவனம் என்ற இலாபம் மட்டுமே! வேறு எந்தவித நஷ்டமும் இல்லை என்ற புதுவித வியாபார உத்தியை கற்றுக்கொடுக்கும் கல்வி மாதம்.
இறுதியாக... 
இறையச்சம் என்னும் தக்வாவை நம் உள்ளங்களில் உறையவைக்க உண்மையாளன் அல்லாஹ் உம்மி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்திற்கு வகுத்தளித்த செயல்முறை திட்டம்.
அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...?

இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும். அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்விரண்டு செயற்பாடுகளும் நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும். 
ஐவேளை தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும். இது கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும். 
தினந்தோறும் திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கி, ஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும். இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட வழிவகுக்கும். 
இஸ்லாமிய அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். இது ஈருலுக வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும். 
இரவு வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர வேண்டும். இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும். 
உறவுமுறையை பேணி வாழ வேண்டும். இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும். 
இல்லாருக்கும். எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும். இது பிறர் மீது அன்பு செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்
அன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...! தயாராகுவோம் நாம்...! 

இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்! இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்! 
வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்! வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்! 
பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்! இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்! 
புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்! நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்! 
இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்! ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்! 
அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்! அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்! 
சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்! சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!
உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்! 

Thursday, March 10, 2011

நற்பண்புகள்

5970. வலீத் இப்னு அய்ஸார்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் இல்லத்தைச்
சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ(ரஹ்), '(இதோ!) இந்த வீட்டுக்காரர்


(
பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்' என்று கூறினார்கள்:
நான் நபி(ஸல்) அவர்களிடம் 'கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?' என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில்  நிறைவேற்றுவது' என்றார்கள். 'பிறகு எது?' என்று கேட்டேன். 'தாய் தந்தையருக்கு நன்மை செய்வது' என்றார்கள். (நான் தொடர்ந்து) 'பிறகு எது?' என்றேன். அவர்கள்,

'
இறைவழியில் அறப்போரிடுதல்' என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம்
நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம்
கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள்.

Monday, February 21, 2011

வாக்காளர் பட்டியலில் நம்மைபற்றிய விவரங்கள் சரிபார்க்க

நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில சோதித்துக்கொள்ளலாம்.வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவருக்கு சைதாப்பேட்டையில் ஒட்டு இருக்கும். மகன்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அவ்வளவு பொறுப்பாக சென்று நமது பெயர் விவரங்களை சரிபார்ப்பர்காள என்றால் இல்லை. நமது பெயர்பார்க்கும் வேலையைஅரசு வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணை விவரத்தில் உள்ள விவரங்கள் சரிபார்க்க நாம் சைதாப்பேட்டை வரவேண்டியதில்லை. வெளிநாட்டில் இருந்தே விவரங்களை சரிபார்க்கலாம். இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிக செய்யவும்.உங்களுக்கு  விண்டோ ஓப்பன் ஆகும்

வருகின்ற விண்டோவில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள உங்கள சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.(இப்போது உங்களுடைய சட்ட மன்ற தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்கள்).இதில் முதலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம். அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வாக்காளர்பெயர் தட்டச்சு செய்யவும். நீங்கள் வாக்காளர் பெயர் தட்டச்சு செய்வதற்கு வசதியாக உங்களுக்கு தமிழ் கீ-போர்ட் இணைத்துள்ளார்கள். தேவையான எழுத்தை கிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையானதை கிளிக் செய்து பெயரை எளிதில் அமைக்கலாம்.

அடுத்துள்ள வாக்குசாவடியின் பெயர் மூலமாகவோ - தெருவின் பெயர் மூலமாகவோ எளிதில் தேடலாம்.
தேர்தல் வருவதற்கு முன் உங்கள் வாக்கு உரிமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.ஒட்டுப்போடுங்கள். ஜனநாயக கடமையை நிலைநாட்டுங்கள்.

Tuesday, January 11, 2011

'தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது''



ஒரு வீடு என்பது மண்ணாலும் கற்களாலும் ஆனது. அதுபோல் ஒரு குடும்பம் என்பது அன்பாலும் பாசத்தாலும் ஆனது. அந்தப்பாசப்பிணைப்பு இன்று கொஞ்சங் கொஞ்சமாக மனித மனங்களிலிருந்து கழன்று கொண்டிருக்கிறதோ என்கின்ற ஐயப்பாடு தோன்றுகிறது.

பெற்றோர் அன்பு, சகோதர பாசம் உறவுத்தொடர்புகள் எல்லாம் குறைந்து வருகிறது. 'வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.' சில இடங்களில் இன்று இந்த நிலைதான். இந்த நிலையில் தாய் - தந்தை உறவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

தாய்க்கு முதலிடம்: 'மனிதர்களுள் யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?' இது நபித்தோழர் ஒருவரின் வினா. 'தாய்' என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். 'அடுத்து யார்?' என மீண்டும் அவர் கேட்க, 'தாய்' என்றே கூறினார்கள். மூன்றாவது முறையாக 'அடுத்து யார்?' என்று கேட்டபோதும் 'தாய்' என்றே பதில் வந்தது. 'அடுத்து யார்?' என நான்காம் முறையாக அவர் கேட்க 'தந்தை' என்று பதிலளித்தார்கள் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ( அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, - புகாரீ ஷரீஃப்.)

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையைவிட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். காரணம் என்ன? திருக்குர்ஆன் கூறுகிறது: 'அவனுடைய அன்னை, அவனைச்சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.' ( அல் குர்ஆன் 46:15).

தியாகத்திற்கு தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின் பிறப்புக்காக இறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; தன் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தைக்காகத் தாய் செய்யும் தியாகம் மகத்தானது. கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள ஒரு பத்து நிமிடம் மற்றொருவரின் விரகுச்சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இந்த காலத்தில் தொடர்ந்து பத்து மாதம் ஒரு சிசுவைத் தன் வயிற்றில் சுமப்பதென்பது எவ்வளவு பெரிய தியாகம்!

குழந்தைக்கு நோய் என்றால் தான் பத்தியம் இருக்கிறாள் என்பது மாத்திரம் அல்ல, நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாதபோது நலமாயுள்ள தாய், தானும் அந்த மருந்தை சிறிது குடிக்கிறாள். ஏன்? தாய்க்கும் தனக்கும் ஒரே நோய்தான் என்று குழந்தை எண்ணி ஆறுதல் அடைவதற்காக. ஒரு அறிஞரின் சொல் எப்படி இருக்கிறது பாருங்கள்: 'ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை'. சிலரது வாழ்வில் இது உண்மையுங்கூட!

தாயன்பு: ஒரு பெண் தன் இரு பெண் மக்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து யாசகம் கேட்டு நின்றாள். அவளிடம் மூன்று பேரித்தங்கனிகளை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கொடுக்கின்றார்கள். அவற்றில் ஒன்றை தனக்கு வைத்துக்கொண்டு மற்ற இரண்டையும் தன் மகள்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறாள். அவற்றை அவர்கள் சாப்பிடுகின்றனர். தனக்குரியதை சாப்பிட அந்த பெண் எத்தனித்த போது அதையும் தங்களுக்குத் தரக்கேட்டு அந்தக் குழந்தைகள் அடம்பிடிக்கின்றன. எவ்வித முகச்சுழிப்புமின்றி சந்தோஷமாக அப்பழத்தை இரண்டாகப் பிளந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்ச்சி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவின் மனதைப்பெரிதும் பாதித்தது. இரவில் வீடு திரும்பிய நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த நிகழ்வைக்கூற, மெய்சிலிர்த்துப் போன நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அவள் நேரடியாக சுவனம் செல்வாள்' என்ற சுபச்செய்தியை தெரிவிக்கிறார்கள். ( அப்துல்லா இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு - முஸ்லிம் ).



கண்ணியமான உறையாடல்: தாய் - தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை 'சீ' என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக ( திருக்குர் ஆன் 17:23 ). பொதுவாக வயசு கூடக்கூட டென்ஷன் அதிகமாகும்.

இதுமாதிரி முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம், ஏசிவிடலாம். ஆனாலும்கூட அதற்குப்பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது. 'பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று' என நபிகள்நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், நீ ஒருவனின் தந்தையைத் திட்ட அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே என்று உணர்த்துகிறார்கள். ( முஸ்லிம் )

உணவளிப்பது: நடைமுறை வாழ்வில் பெற்றோருக்கு உணவூட்டிப் பராமரிக்கும் விஷயத்தில்கூட கஞ்சத்தனம் செய்யப்படுகிறது. பெற்றோர் வசதியாக இருந்து பூர்வீகச்சொத்துகளில் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்தால் உணவு, வசதி எல்லாவற்றிலும் அவர்களுக்கு சகல மரியாதையும் கிடைக்கிறது. இல்லையெனில் சாதாரண அளவுக்குக்கூட இருக்காது. நகை பணம் தந்தால் அம்மா அப்பா இல்லாவிட்டால் டப்பா. இது எந்த வகைக்குணமோ? அம்மா அப்பா உயிரோடிருக்கும்போதே ' நாற்காலி உனக்கு, கட்டில் எனக்கு, பீரோ உனக்கு கிரைண்டர் எனக்கு' என்று பொருட்களைப் பங்கு வைத்து, முடிவில் அப்பா உன்னிடம் அம்மா என்னிடம், அப்பாவுக்கு ஒரு வீட்டில் சாப்பாடு அம்மாவுக்கு இன்னொரு வீட்டில் சாப்பாடு என்று ஜடப்பொருட்களாகப் பெற்றோரைப் பங்கு பிரிக்கும் பண்பாட்டுச் சீர்குலைவை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை.

பெற்றோர்கள் இருவரையும் ஒருசேர வைத்து உணவு கொடுத்தால் என்ன? இருவருக்கும் சேர்த்து சமைப்பது கஷ்டமா? பொருள் நஷ்டமாகிவிடுமா என்ன? நாளை இவர்களை இவர்களுடைய பிள்ளைகள் சோறு ஒருவீட்டிலும் குழம்பு ஒரு வீட்டிலும் போட்டு கொடுமைப் படுத்தினால் என்ன செய்வார்கள்? 'எங்களுக்கே தட்டுப்பாடு, இதிலே பெற்றோர்களை எங்கே கவனிப்பது?' என்று கேட்பவர்களின் காதில் ஒருசெய்தியைப் போடவேண்டியுள்ளது. ஏழெட்டுக் குழந்தைகளுக்கு, தாய், தந்தை இருவருமாகச் சேர்ந்து சோறூட்ட முடிகிறதென்றால் அந்த ஏழெட்டுப்பேர் சேர்ந்து அந்த இருவருக்கும் சோறூட்ட முடியாதா என்ன!

இதிலே நகைப்பிற்குரிய செய்தி, உயிரோடு இருக்கும்போது ஒரு வாய் சோறு போட்டு பெற்றோரைக் கவனிக்காத சில ஆசாமிகள், அவர்களின் மரணத்திற்குப்பின் 'ஃபாத்திஹா' கொடுக்கிறோம் என்னும் பெயரில் பல்வேறு உணவுப்பொருட்களை முன்னால் வைத்து அமர்க்களப்படுத்துவார்கள். சிலர் திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு நன்கு உபகாரம் புரிவார்கள். ஆனால் மனைவியின் வருகைக்குப் பிறகு மாற்றங்கள் ஏற்படும்.தலையணைமந்திரம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. உடலால் தளர்ச்சியடைந்துவிட்ட பெற்றோரை மனைவியின் சொல்கேட்டு மனத்தளவிலும் தளர்ச்சியடைய வைப்பவன் மனிதாபமுள்ள மகனாக இருக்க முடியாது.

சிந்தனைக்கு சில அறிவுரைகள்: குழந்தைப் பருவத்தில் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் உபகாரம் புரிந்தால் முதுமைப் பருவத்தில் உங்களுடைய குழந்கைள் உங்களுக்கு உபகாரம் புரிவார்கள்.(அபூஹுரைரா ரளில்லாஹுஅன்ஹு (ஹாகிம்) இதை இப்படியும் புரட்டிப்போட்டுசொல்லலாம். தம்முடைய பெற்றோரை அவமதிக்கும் ஒவ்வொருவரும் அவர்தம் பிள்ளைகளால் பிற்காலத்தில் அவமதிக் கப்படுவது நிச்சயம்.

அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, பைஹகியில் பதிவாகியுள்ள ஆதாரப்பூர்வமான நபிவழிச்செய்தி: 'ஒவ்வொரு குற்றத்திற்கான தண்டனையும் மறுமையில் வழங்கப்படுவதுதான் இறைவிதி. ஆனால் பெற்றோருக்கு நோவினை செய்தவன் அதற்கான பிரதிபலனை இவ்வுலகிலேயே கண்கூடாகக் கண்டபின்பே இறப்பான். (நவூதுபில்லாஹ்)



மனப்பதிவுக்கான இன்னொரு செய்தி: 'ஒரு நபித்தோழர் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அவைக்கு வந்து, நான் இஸ்லாத்திற்காக நாடுதுறந்து செல்லத்தங்களிடம் உறுதிமொழிஎடுத்திட வந்துள்ளேன்.என் தாய், இதற்கு அனுமதியளிக்காத நிலையில் அவரையழவைத்துவிட்டு இங்கே புறப்பட்டு வந்துள்ளேன்.' எனக் கூறினார். உடனே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்த வார்த்தை என்ன தெரியுமா? 'உடனே இங்கிருந்து புறப்பட்டு அழுதுகொண்டிருக்கும் உனது தயைச்சிரிக்க வைத்துவிட்டு பிறகு வந்து என்னைப்பார்.'(அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹுஅன்ஹு-அபூதாவூது).

நம்மில் சிலர் பெற்றோரை அழவைத்துவிட்டு தொழுது அல்லாஹ்வை சந்தோஷப் படுத்திடலாம் என்கிற எண்ணத்தில் இருக்கலாம். அவர்களுக்கான நபிமொழி செய்தி இது: 'அல்லாஹ்வின்; பொருத்தம் பெற்றோரின் பொருத்தத்தில் இருக்கிறது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் இருக்கிறது.'பொதுவாக திருக்குர்ஆன் எல்லா இடங்களிலும் தாயோடு இணைத்து தந்தைக்கும் பணிவிடை செய்வதையே வலியுறுத்துகிறது. திருக்குர்ஆன் தெளிவுரையின் சிறந்தவராக கருதப்படும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது திருக்குர்ஆன் விரிவுரையில் ''மூன்று திருக்குர்ஆன் வசனங்கள் ஒன்றுடன் இன்னொன்று இணைத்து வந்துள்ளன. ஒன்றை விட்டு விட்டு மற்றொன்றை மட்டும் செய்தால் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்.' என்கிறார்கள்.

அது:

1.'அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்'(3:32) என்கிறது திருக்குர்ஆன். அல்லாஹ்வுக்கு மட்டும் வழிப்பட்டு அவன் தூதருக்கு வழிப்படாவிட்டால் அவனை அல்லாஹ் ஏற்க மாட்டான். (இங்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழிப்படுங்கள் என்பது அவர்கள் சொல்லுக்கு கட்டுப்படுங்கள் என்பதாகும்)

2. ''தொழுகையை நிலை நிறுத்துங்கள் ஜகாத்தையும் கொடுங்கள்.'' (2:43)

என்கிறது திருக்குர்ஆன். வசதியுள்ள செல்வந்தன் ஜகாத் கொடுக்காமல் தொழுகையை மட்டும் தொழுதால் ஈடேற்றம் கிடைக்குமா?

3. ''எனக்கும் (அதாவது அல்லாஹ்வுக்கும்) உன்னுடைய தாய் தந்தையர்க்கும் நன்றி செலுத்தி வருவாயாக.'(31:14) என்கிறது திருக்குர்ஆன். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவன் தாய் தந்தைக்கு நன்றி செலுத்தாவிட்டால், அதையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்'' என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்குகிறார்கள்.



அல்லாஹ்வின் அருள்மறை தெரிவிக்கிறது: ''அந்த இறைவணைத்தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவரோ முதுமையை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை 'சீ' என்றுக் கூட கூறவேண்டாம். மேலும் அவர்களைக் கடிந்து பேசி விரட்டவும் வேண்டாம். ஆவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக: மேலும், 'என் இறைவனே நான் குழந்தையாக இருந்தபோது என்னை இவர்கள் எவ்வாறு (அன்போடும் பாசத்தோடும்) வளர்த்தார்களோ, அவ்வாறே, நீயும் இவர்கள் மீது கருணை புரிவாயாக! என்றும் கூறி பிரார்த்திப்பீராக!'' (திருக்குர்ஆன் 17:23,24)

அதுமட்டுமின்றி, 'நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கம் நலம்; செய்ய வேண்டியது) பற்றி அறிவுறுத்திக் கட்டளையிட்டுள்ளோம்.' (திருக்குர்ஆன் 31:14) என்று பல இடங்களில்அ தாய் தந்தை இருவருக்கும் அடிபணிந்து நன்றி செலுத்தி வருமாறு கூறும் இல்லாஹ், தாயின் தகுதியை தந்தையைவிட ஒருபடி மேலாக உயர்த்திச் சொல்வதற்கான காரணத்தையும் கூறுகிறான்.

''அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக அவனைத் தன் கர்ப்பத்தில் சுமந்தாள், மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு வருடங்கள் பிடிக்கின்றன.' (அல் குர்ஆன் 31:14)என்று தாய் அனுபவிக்கும் துன்பத்தை தெளிவாகக் கூறகிறான். 'பலவீனத்தின் மேல் பலவீனமாக' என்ற அல்லாஹ்வின் கூற்றுக்க இன்றைய மருத்துவ வல்லுநர்கள் கூறும் விளக்கத்தை கவனியுங்கள்:

குழந்தை தன் எலும்புகள் வளரத் தேவையான 'கால்சியம்' சத்தை தாயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அதே போல் தனக்குத் தேவையான இரும்புச்சத்தை தாயின் இரத்தத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது.

தாயின் கருப்பைச் சுவர்கள் குழந்தைக்கு வேண்டிய இரத்தத்தை அதிகரிப்பதால் விரிவடைகின்றன. இதனால் தாயின் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகிறது. தலை சுற்றல்கூட வரும். தாயின் இதயம் கற்ப காலத்தில் மட்டும் மிக அதிகமாக இயங்குகிறது. இதனால் தாய்க்கு அதிக களைப்பு நெஞ்சுக்கரிப்பு கூட ஏற்படுகிறது.

குழந்தையின் எடை அதிகரிக்கும்போது தாயின் கீழ் முதுகில் வலி ஏற்படுகிறது. இதன் மூலம் தலைவலி, வயிற்று வலி, கால்வலி, பார்வையில் மந்த நிலை ஏற்படுகிறது.

பொதுவாக குழந்தை பெற்ற பின் தாய்மார்களில் 25 முதல் 50 சதவிகித தாய்மார்கள் மனநலக்குறைவு அடைகிறார்கள் என்கின்றனர் மருத்துவ மேதைகள். மெய் சிலிரக்க வைக்கும் தாயின் தியாகத்தை மறக்கலாமா?

ராட்சசியாக இருக்கும் தாய்க்குமா மரியாதை!

சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படுவதுண்டு: ஒரு ராட்சசியாக இருக்கும் தாய்க்குமா மரியாதை செய்ய வேண்டும்?

ஆம்! மரியாதையும் பணிவிடையும் செய்தே ஆக வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிற பாவத்தை விட பெரும்பாவம் எதுவும் இந்த உலகில் இல்லை. அப்பேர்பட்ட பாவம் புரிபவளாக ஒரு தாய் இருப்பினும் அவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்தே ஆக வேண்டும்.

ஹள்ரத் அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹா என்கின்ற பெண்மணியின் தாயார் முஸ்லிமாகாத நிலையில் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவராக இருந்து கொண்டு தம் மகளை தேடி வந்த போது 'யா ரசூலுல்லாஹ், என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார், நான் அவருடன் உறவாடலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஆம்! நீ உன் தாயை பேணி இரக்கத்தோடு நடந்து கொள்,' என்றார்கள். ( ஆதாரம்: புகாரி )

முஸ்லிமாகாமல் இணை வைக்கிற பெரும் பாவத்தைச் செய்து வருகிற தாயே ஆனாலும், அவரைப் பேணி வருவது கட்டாயம் என்றால், ஒரு தாய் ராட்சசியாக இருக்கிறார் என்பதற்காக அவரை மதிக்காமல் இருக்க இஸ்லாம் அனுமதிக்குமா என்ன? ராட்சசியாக இருந்தாலும் அவரையும் இரக்கத்தோடு அணுகுவதே இஸ்லாத்தின் ஆணை.

'தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது'' என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம். நாம் அணைவரும் பெற்றோரைப் பேணக்கூடியவர்களாகத் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.