Pages

Monday, December 31, 2018

டிசம்பர் 30,2018 நமது ஊர் பள்ளிவாசல் மற்றும் அதன் சுற்றியுள்ள தெருக்களில் CCTV

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
                    
                   நமது ஊரின் செயல் தலைவர் சகோதரர் நாசர் பாய் அவர்களின் விடாமுயற்சியால் நமது பள்ளிவாசல் மற்றும் அதன் சுற்றியுள்ள  தெருக்களில் (CCTV) கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
                   
                    இதன்  மூலம்  நமது  பள்ளிவாசல் தெரு மக்கள் பயனடையும்  நல்லெண்ணம்கொண்டு  இப்பணியை முழுமையாக   நிறைவு செய்த அன்பு சகோதரர் நாசர் பாய் அவர்களுக்கும் இதற்கான  பொருள் உதவி  செய்த  நமது  ஊர் சகோதரர்கள் மற்றும் ஒத்துழைப்பு தந்த நிர்வாகதினர் அனைவருக்கும் 


பாபுராஜபுரம் மக்கள் மன்றம் சார்பாக ஜஸாகல்லாஹ் ஹைரா

இங்கே சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக 







பிஸ்மி மளிகை மெயின் ரோடு 



பள்ளிவாசல் வெளி தோற்றம் 









Tuesday, November 20, 2018

பெண் குழந்தை ஒரு பாக்கியம்

பெண் குழந்தை பிறப்பதை விரும்பாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். பெண் குழந்தை என்றாலே அது ஒரு பாரம்,குடும்ப தலைவருக்கு பொருளாதார சுமை என்று எண்ணுகிற மக்கள், அத்தகைய சிந்தனை இஸ்லாத்திற்கு வெளியில் நின்று கொண்டு தான் நமது உள்ளத்தில் ஏற்பட வேண்டுமே தவிர, ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இத்தகைய எண்ணமே நம் மனதில் எழக்கூடாது என்பதை உணர வேண்டும்.

இந்த உலகில் ஐம்பது வருடமோ அறுபது வருடமோ வாழ்ந்து விட்டு மரணிக்கும் நாம், இயன்ற வரை மறுமை வெற்றிக்காக பல காரியங்களை செய்கிறோம். தொழுகிறோம் நோன்பு நோற்கிறோம், ஏழைகளுக்கு உணவளிக்கிறோம் சகாத் வழங்குகிறோம், இன்னும் ஏராளமான நல்லறங்களை செய்கிறோம்.
இதை செய்வதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது ஒன்றே ஓன்று தான். அது மறுமையில் அல்லாஹ் நம்மை அன்பு பார்வை பார்க்க வேண்டும். அல்லாஹ் நம்மை நல்லவன் என்று அங்கீகரிக்க வேண்டும்.
இந்த எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்தக்கூடிய நாம், அல்லாஹ்வும் அவன் தூதரும் எதையெல்லாம் செய்யுமாறு சொல்லியுள்ளார்களோ , அதை இயன்றவரை செய்யக்கூடியவர்களாகவும் எதை விட்டெல்லாம் தவிர்ந்து கொள்ள சொல்கிறார்களோ அதை எல்லாம் விட்டு தூரமாகி கொள்பவர்களாகவுமே தான் நாம் வாழ வேண்டும்.

இந்த உலகில் ஒரு சில நல்லமல்களை செய்து விட்டு மரணித்து விடும் நாம், நமது மரணத்திற்கு பிறகும் நமக்கு நன்மையை ஈட்டு தரக்கூடிய ஒன்றை இந்த உலகில் விட்டு செல்கிறோம் என்றால் அது நமது குழந்தைகள்!


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே நின்று விடுகின்றன.
1.நிலையான தர்மம். 2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி. 3.அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள்.
முஸ்லிம்3358

எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்களை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், சொர்க்கத்தில் ஒரு அடியானின் தகுதியை உயர்த்துவான். யா அல்லாஹ், இது எனக்கு எப்படி கிடைத்தது? என்று அவன் கேட்கும் போது, உனக்காக உன் குழந்தை பாவ மன்னிப்பு கேட்டது அதனால் தான், என்று அல்லாஹ் விடையளிப்பான்.
அஹ்மத்10202

அத்தகைய பாக்கியம் நமக்கு கிடைப்பதற்கு நாம் எந்த வகையிலாவது உழைக்க வேண்டுமா பாடுபட வேண்டுமா?? எதுவும் இல்லை, நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தாலே போதும்.

குழந்தைகள் நமக்கு கிடைத்த பாக்கியமாக நாம் கருத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கும் போது, பெண் குழந்தைகளை நாம் வெறுப்பது என்பது, நபியை விட்டு நாம் விலகி செல்கிறோம் என்பதையே காட்டும்.


இவ்வாறு தாங்கள் பெற்ற பெண் குழந்தைகளை கண்டு வெறுப்பு அடைகிற பெற்றோர்களை அல்லாஹ் கடுமையாக சாடுகிறான்.


அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (6:140)

என்று கண்டிக்கிற அல்லாஹ், இன்னொரு வசனத்தில்

அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்கு கூறப்பட்ட கேட்ட செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து வாழ்கிறான்.இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்). கவனத்தில் கொள்ளுங்கள் அவன் தீர்பளிப்பது மிகவும் கேட்டது. (16:58)

என்று கூறுகிறான்.

பெண் குழந்தைகளை வெறுப்பதோ அதனால் கவலைப்படுவதோ, அதை இழிவானதாக கருதுவதோ, அதை கொலை செய்து விடவதோ அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவமான காரியமாக இருக்கிறது.

இதை கண்டிப்புடன் சொன்ன அல்லாஹ், பெண் குழந்தை பிறந்த செய்தியை பற்றி சொல்கிற போது அது ஒரு நற்செய்தி என்கிறான் !!

பெண் குழந்தைகளை வெறுப்பவர்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் நமக்கு பாரமாக இருக்கும் என்றால், அல்லாஹ் அதை நற்செய்தி என்று சொல்வானா?? அப்படியானால் நிச்சயம் அதில் ஏதோ ஒரு நற்செய்தி இருக்கத்தான் செய்யும்.

ஹதீஸ்களில் இதற்கு விடை கிடைக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் முஸ்லிம் 5127


முதல் ஹதீஸில், நல்ல சாலிஹான குழந்தைகள் நமக்காக பிரார்த்தனை செய்வதன் மூலம் சொர்க்கத்தில் நம் அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், இந்த ஹதீஸில், பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே நாம் சொர்கத்திற்கு செல்வதற்கு காரணமாகி விடுகிறது என்பதை விளக்குகிறார்கள் என்றால், நாம் எந்த அளவிற்கு பெண் குழந்தைகளை அன்புடனும் பாசத்துடனும் வளர்க்க வேண்டும் என்பதை புரிய வேண்டும்.

இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 5995

அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்த கூடிய ஒரு முஸ்லிம், என்றைக்கும் தனது குழந்தைகளை, அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து, அதன் மூலம் சொர்க்கம் செல்லவே ஆசைப்பட வேண்டும்.

பொருளாதார சுமை அதிகரிக்கும் என்று எண்ணி கூட நமது பெண் குழந்தைகளை கொன்று விடகூடாது.
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் என்று அல்லாஹ் 17:31 வசனத்தில் எச்சரிக்கிறான்.

இந்த எச்சரிக்கையோடு சேர்த்து நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்கிற வாக்குறுதியையும் தருகிறான்.

நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்று அவன் வாக்குறுதி தந்து விட்ட பிறகு, அதை பொருட்படுத்தாமல் நாம் செயல்படுவது அல்லாஹ்வின் வாக்குறுதியை கூட நாம் மதிக்காதது போல ஆகும் என்பதையும் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பெண் குழந்தைகளை நமக்கு கிடைத்த பாக்கியமாக கருதி வளர்ப்போம், மறுமையில் வெற்றி பெறுவோம்.

Thursday, October 4, 2018

இவர் தான் முஹம்மத்!!

இவர் தான் முஹம்மத்!!

ஒரு திரைப்படம் இன்று உலகத்தையேஉலுக்கிவிட்டிருக்கின்றது.
உலகெங்கும் 800க்கும் மேற்பட்ட நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. இந்த நாள் வரை ஐம்பது பேர் உயிரிழந்திருக்கின்றார்கள்.

எல்லாமே யாருக்காக? எல்லாமே எதற்காக?

முஹம்மத் நபிக்காகத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும் கொந்தளிப்புகளும்.

முஹம்மத் நபி என்றால் யார்என்ன அது, 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் வாழ்ந்த வாழ்க்கை வழிகாட்டியா? இத்துணை நூற்றாண்டு-கள் உருண்டோடி விட்ட பிறகுமா, மக்கள் அவரை மறக்காது இருக்கின்றார்கள்? இத்துணை ஆண்டுகளுக்குப் பிறகுமா மக்கள் அவருக்காக தங்களின் உயிரையே கொடுக்கின்றார்கள்?

யார்தான் அவர்எப்படிப்பட்டவர் அவர்? அவர் செய்த சாதனைகள் என்ன? அவர் சந்தித்த சோதனைகள் என்ன? போன்ற கேள்விகள் இன்று உலகெங்கும் மக்கள் மத்தியில் உரத்துக் கேட்கப்படுகின்றன. உங்களுக்குள்ளும் இந்தக் கேள்விகள் எழுந்திருக்கலாம்.

அந்தக் கேள்விகளுக்கு விடைதான் இந்த மடக்கோலை.

யார் முஹம்மத் (ஸல்)?

இறைவனிடமிருந்து இத்தரணியில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப் போகின்ற உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்ட இறைத்தூதர்தாம் முஹம்மத் நபி(ஸல்). மனித குல மாணிக்கமாக, அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாக வாழ்ந்து சென்றவர்தாம் அண்ணல் நபிகளார்(ஸல்).

பணம், குலம், அழகு ஆகியவற்றைப் பார்த்து மணம் முடிக்காதீர்கள். மார்க்கத்தைப் பார்த்தே பெண்ணை மணம் முடித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி அமைதியானமணவாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்.

அரபி அல்லாதவரை விட அரபியோ, அரபியை விட அரபி அல்லாத-வரோ சிறந்தவர் அன்று. உங்களில் எவர் இறையச்சம் மிக்கவரோ அவரே உங்களில் சிறந்தவர் என்றும், ‘பிறரைக் கீழே வீழ்த்திவிடுபவன் பலசாலி அல்ல. கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே பலசாலி என்றும், ‘பொறாமை நற்செயல்களை அழித்துவிடும் என்றும் ஏராளமான நல்லுரைகளைச் சொல்லி அமைதியான சமூகத்திற்குப் பாதை அமைத்துக் கொடுத்தவர்.

மோசடி செய்பவன் என்னைச் சேர்ந்தவன் அல்லன் என்றும் உழைப்-பாளியின் வியர்வை உலரும் முன் அவருக்குரிய கூலியை கொடுத்து-விடுங்கள் என்றும் கூறி, தூய்மையானபொருளாதார நடைமுறைகளுக்கு வித்திட்டவர்.

சமூகத்தின் தலைவன் சமூகத்தினரின் தொண்டனாவான் என்றும் பதவியை விரும்புகின்றவர்களுக்கு பொறுப்புகளைத் தராதீர் என்றும் தீர்க்கமான கட்டளைகளைத் தந்து உன்னதமானஅரசியல் வாழ்வுக்கு வழிகாட்டியவர்.

உயர்குலப் பெண் திருட்டுக் குற்றத்துக்கு ஆளாகி தண்டனை-யும் விதிக்கப்பட்ட நிலையில் அவளுக்காக தோழர்கள் பரிந்து பேசியபோது ஆளுக்கொரு நீதியைக் கடைப்பிடித்த சமூகங்கள் அழிந்து போனது உங்களுக்குத் தெரியவில்லையா? என் மகள் பாத்திமாவே தவறிழைத்தாலும் அவளையும் தண்டிப்பேன் எனச் சூளுரைத்து நீதிக்கு உறுதியளித்தவர்.

என அண்ணல் நபிகளாரின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அவரைக் குறித்து இறைவனே ஒரே வரியில் அறிமுகப்படுத்தி-யிருக்கின்றான்.
மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர். (திருக்குர்ஆன் 68 : 4)

உண்மை. முற்றிலும் உண்மை. அண்ணல் நபிகளார்(ஸல்) அழகிய குணங்களைக் கொண்டவராகத்தான் இருந்தார். இதற்கு அவருடன் வாழ்ந்த அவரின் மனைவியரும், தோழர்களுமே சான்றளித்திருக்கின்-றார்கள்.
அவற்றின் விவரம் வருமாறு:

அண்ணல் நபிகளாருடன் இருபத்தைந்து ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தியவர் அன்னை கதீஜா(ரலி). முதன்முதலாக இறைவ-னிடமிருந்து வசனங்கள் அருளப்பட்ட போது பயந்து வியர்த்து விதிர்த்து வந்த அண்ணல் நபிகளாரைப் பார்த்து அன்னையார்(ரலி) சொன்ன வாசகங்களைப் பாருங்கள்:
இறைவன் மீது ஆணையாக! இறைவன் உங்களை எந்தக்-காலத்-திலும் வேதனையில் ஆழ்த்த மாட்டான். நீங்கள் உறவுகளை மதித்தும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றியும் வாழ்கின்றீர்-கள். கடனாளிகளின் கடன் சுமையைப் போக்குகின்றீர்கள். ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் உதவுகின்றீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். உண்மைக்கும் சத்தியத்திற்கும் தோள் கொடுக்கின்றீர்கள். துன்பத்தில் உழல்கின்ற மக்களின் துயர் துடைக்கின்றீர்கள்.

அண்ணல் நபிகளாரின் இன்னொரு மனைவி அன்னை ஆயிஷா(ரலி). அண்ணல் நபிகளாரின் மரணம் வரை அவருடன் இருந்தவர். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அண்ணல் நபிகளார்(ஸல்) எவரையும் எந்தக் காலத்திலும் திட்டியதில்லை. தனக்குத் தீங்கிழைத்தவர்களை மன்னித்து அவர்களுக்கும் நன்மையையே செய்து வந்திருக்கின்றார். சொந்த விவகாரங்களில் எவரையும் பழிக்குப் பழி வாங்கியதில்லை. எந்தவொரு முஸ்லிமையும் அவர் சபித்ததில்லை. எந்தவொரு பணியாளரையும் பணிப்பெண்ணையும் கை நீட்டி அடித்ததில்லை.

அண்ணல் நபிகளாருடன் 23 ஆண்டுகள் இறைவழியில் இணைந்து பாடுபட்ட உற்ற தோழர்தாம் அலீ பின் அபூதாலிப் (ரலி). அண்ணல் நபிகளாருடன் பயணத்திலும் போரிலும் வணக்க வழிபாட்டிலும் ஆலோசனைக் கூட்டத்திலும் இணைபிரியா நண்பராக வாழ்ந்தவர்தாம் அலீ பின் அபூதாலிப்(ரலி). அவர் கூறுகின்றார்: அண்ணல் நபிகளார்(ஸல்) மென்மையானவர். இளகிய மனம் கொண்டவர். எந்தக்காலத்திலும் கடுமையாக நடந்துகொண்டதில்லை. மிகவும் பரந்த மனம் கொண்டவர். ஓங்கிப் பேசமாட்டார். எந்தக் காலத்திலும் அவருடைய நாவிலிருந்து கெட்ட வார்த்தைகள் வந்ததில்லை. எவருடைய குறையையும் துருவித் துருவி ஆராய்ந்ததில்லை. வீண் விவாதம், அதிக பேச்சு, பயனற்ற பொழுதுபோக்கு ஆகிய மூன்றிலிருந்தும் அறவே விலகியிருந்தார்.

அண்ணல் நபிகளாரின் தோழர்களில் ஒருவர் அனஸ் பின் மாலிக் (ரலி). அண்ணல் நபிகளாரின் பணியாளராய் பல்லாண்டுகள் இருந்தவர்.
அவர் கூறுகின்றார்: நான் அண்ணல் நபிகளாரின் பணியாளராகப் பத்து ஆண்டுகள் சேவையாற்றியிருக்கின்றேன். அவர் ஒரு நாள் கூட என்னைப் பார்த்து சே.. என்று கூட சொன்னதில்லை. அவர் சொன்ன வேலையைச் செய்ய மறந்துவிட்டாலும், அல்லது செய்யத் தவறிவிட்டாலும்கூட அவர் என்னைப் பார்த்து ஏன் இப்படி நடந்து கொண்டாய்?’ என ஒரு வார்த்தை கேட்டது கிடையாது.

அண்ணல் நபிகளாரின் அழைப்பை எதிர்ப்பதில் முன்னணியில் நின்ற அபூசுப்யான் ரோமப் பேரரசரிடம் அண்ணல் நபிகளாரைக் குறித்துச் சொன்னதாவது: முஹம்மத் பொய் சொல்லி நான் பார்த்ததில்லை. அவர் எந்தக்காலத்திலும் கொடுத்த வாக்குறுதியை மீறியதில்லை. ஒப்பந்தத்தை உடைத்ததில்லை.
இந்தச் சான்றுகள் தருகின்ற செய்தி என்ன?

இன்னொன்றையும் கேளுங்கள். அண்ணல் நபிகளார்(ஸல்) தம் வாழ்நாள் முழுவதிலும் ஒருவரைக் கூட கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக வரலாறு கிடையாது.

கைதிகளாகப் பிடிபட்டவர்கள், அடிமைகள், பணியாளர்கள், ஏழைகள் ஆகிய பலவீனமான மக்களிடமும் அவர் இஸ்லாத்தைத் திணித்ததில்லை. அண்ணல் நபிகளாரை வளர்த்துப் பாதுகாப்பு அளித்த அவருடைய பெரிய தந்தை அபூதாலிப் இறுதிவரை இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணித்தார்.

அவருடைய நெருங்கிய உறவினர்களில் பலர் இஸ்லாமியப் பிரச்சாரம் தொடங்கிப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இஸ்லாத்தில் இணைந்தவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைக்க அண்ணலாரிடம் அனுமதி கோரிய போது அதனை மறுத்தார்.

அதுமட்டுமல்ல, மக்கா நகரம் அண்ணலாரால் வெற்றி கொள்ளப்பட்டபோது, தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் துன்பங்கள் அளித்த மக்காவாசிகளை மனப்பூர்வமாக மன்னித்த மாண்பாளர் அவர்.

பகைவரையும் மன்னித்த அந்தப் பண்பாளரைப் பற்றி,
மென்மைக்கு அடையாளமாய் வாழ்ந்த அந்த உத்தமரைப் பற்றி,
இளகிய மனமும் ஒழுக்கசீலமும் படைத்த அந்த மாமனிதரைப் பற்றி,
கனிவும் கருணையும் கொண்ட,
வாழ்நாளில் எவரையும் பழி வாங்காத அந்த உயர்ந்த தலைவரைப் பற்றி இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமே என உங்கள் மனம் பரபரக்கின்றதா?

தொடர்பு கொள்ளுங்கள்:

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு & புதுச்சேரி
138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை - 600 012
Phone : 044 -2662 1101, Fax : 2662 0682
Tel : 044 -2662 1101, Fax : 2662 0682
Email : jihtnzone@gmail.com, 
Website : www.jihtn.org