Pages

Thursday, October 10, 2013

நபிமொழி அறிவோம்

“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
 

Friday, July 19, 2013

நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்

1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
 2) எத்தனையோ நோன்பாளிகள், அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர், இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, இப்னுமாஜா)
 3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடலுறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் ” நோன்பாளி ” என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
 விளக்கம்: நோன்பு நோற்பதென்பது வெறும் பசி, தாகத்தோடு இருப்பதல்ல, பசி தாகத்தை கட்டுப்படுத்துவதைப் போன்று, மற்ற எல்லாத் தவறுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யார் நோன்பு நோற்றுக் கொண்டு, தவறான பேச்சுக்கள் இன்னும் தவறான செயல்களைச் செய்கின்றாரோ அவர் பசித்திருந்ததையும் தாகித்திருந்ததையும் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளமாட்டார். ஆகவே, நோன்பு மாதத்திலும் நோன்பு அல்லாத மாதத்திலும் எல்லாத் தவறுகளையும் விட்டு, உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஆனால் இன்று நோன்பு மாதத்தின் இரவு நேரத்தை வீணாக விழித்திருந்து சுப்ஹு தொழுகையின்றி தூங்கிவிடுபவர்கள் பலர். இவர்கள் பகல் நேரத்தை தூக்கத்திலேயே கழித்து, பல தொழுகைகளை பாழாக்கி விடுகின்றார்கள். அல்லாஹ் நம்மீது நோன்பைக் கடமையாக்கியது, பாவங்களைச் செய்வதற்கும் ஃபர்லான தொழுகைகளை பாழாக்குவதற்குமா? நிச்சயமாக இல்லை! நாம் எல்லாப் பாவங்களையும் விட்டு, தொழுகைகள் மற்றும் பல நல் அமல்களைச் செய்வதற்குத்தான். ஆகவே, தவறுகளை முற்றாக விட்டு, தொழுகைகளையும் மற்ற எல்லா அமல்களையும் உரிய நேரத்தில் செயல்படுத்த நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக!

Thursday, July 18, 2013

நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால்,நோன்பாளி குளிப்பதில் தவறில்லை

யாராவது) மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால், அவர் அவருடைய நோன்பை பரிபூரணப்படுத்தட்டும், நிச்சயமாக அல்லாஹ்தான் அவரை சாப்பிடவும், குடிக்கவும் வைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: யாராவது நோன்பு நேரத்தில் மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால் குற்றமில்லை. ஞாபகம் வந்ததும் சாப்பிடுவதை குடிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும். அவருடைய நோன்பு பரிபூரணமானதே. யார் வேண்டுமென்று சாப்பிடுகின்றாரோ அல்லது குடிக்கின்றாரோ அவரின் நோன்பு முறிந்துவிடும், இன்னும் அது பெரும் குற்றமாகும். அந்த நோன்பை பிறகு நோற்க வேண்டும்.
1) நபி (ஸல்) அவர்கள் (உடலுறவின் காரணமாக) முழுக்கான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
2) நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் போது வெப்பம் அல்லது தாகத்தின் காரணமாக தன் தலைமீது தண்ணீரை ஊற்றியதாக சில நபித்தோழர்கள் மூலமாக அபூபக்ர் இப்னு அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், முஅத்தா, அபூதாவூத்)   3) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது ஈரத்துணியை தன்மீது போடுவார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: தேவைப்படும் போது, நோன்பாளி பகல் நேரத்தில் குளித்துக் கொள்வதில் தவறில்லை. புகாரி (ரஹ்) அவர்கள், தன் புகாரி கிரந்தத்திலே நோன்பாளி குளிக்கும் பாடம் என தலைப்பிட்டு மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களைக் கூறியிருக்கின்றார்கள்.

நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்கவேண்டும். எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தர்மமாக அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). ரமளான் மாதம் எத்தகைய தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (மழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). அல்குர்ஆன் 2:184,185)
 1) ஹம்ஸா இப்னு அம்ருல் அஸ்லமி என்னும் நபித்தோழர், நான் பிரயாணத்தில் நோன்பு நோற்கலாமா? என நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்டார்கள். (அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார்) நீங்கள் விரும்பினால் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால் நோன்பை விட்டுவிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
 2) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு யுத்தத்திற்குச் சென்றிருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பை விட்டவர்களும் இருந்தனர். நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறவில்லை. யாருக்கு சக்தி இருக்கின்றதோ அவர் நோன்பு நோற்பது அவருக்கு சிறந்ததென்றும், யாருக்கு அதற்கு சக்தி இல்லையோ அவர் நோன்பை விடுவது சிறந்ததென்றும் அவர்கள் கருதினார்கள் என அபூ சயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
3) ஒரு பிரயாணத்தின் போது நிழலிலே ஒருவரை சூழ்ந்து, மக்கள் கூடியிருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இந்த உங்களின் நண்பருக்கு என்ன ஏற்பட்டு விட்டது? என கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர் நோன்பாளி என கூறினார்கள். பிரயாணத்தில் நோன்பு நோற்பது நல்ல செயலில்லை. அல்லாஹ் உங்களுக்கு அளித்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில்: ஒரு மரத்தின் நிழலிலே ஒருவர் மீது தண்ணீர் தெளிக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. (ஆதாரம்: நஸாயி)
4) நபி (ஸல்) அவர்களுடன் கோடைகாலத்தில், நாங்கள் ஒரு பிரயாணம் செய்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பு நோற்காதவர்களும் இருந்தார்கள். நாங்கள் (வெப்பத்தின் காரணமாக அப்பிரயாணத்திலே) நிழலில் உட்கார்ந்தோம். நோன்பு நோற்றவர்கள்(களைத்து) விழுந்துவிட்டார்கள். நோன்பில்லாதவர்கள் எழுந்து பிரயாணிகளுக்குத் தண்ணீர் புகட்டினார்கள். இதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ”நோன்பில்லாதவர்கள் இன்று அதிக நன்மை பெற்றுவிட்டார்கள்” எனக் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)
5) நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு தொழுகையில் பாதியையும் (அதாவது நான்கு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்தாக சுருக்குவதற்கும்) நோன்பை விடுவதற்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை விடுவதற்கு அனுமதித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்;: நஸாயி)
6) மக்கா வெற்றி பெற்ற வருடம் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக நபி (ஸல்) அவர்கள் (மக்கா) சென்றார்கள். கதீத் என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
 7) கோடைகாலத்தின் போது நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றிருந்தோம். (சூட்டின் காரணமாக)ஒரு மனிதர் தன் தலைக்கு மேல் கையை வைக்கும் அளவிற்கு அந்த சூடு இருந்தது. எங்களில் நபி (ஸல்) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்கவில்லை என அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி)
 விளக்கம்: ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிமான புத்தியுள்ள, வயதுவந்த ஆண், பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால், பிரயாணி, நோயாளி, கர்ப்பிணிப்பெண், பாலூட்டும் தாய், நோன்பு நோற்;க இயலாத வயோதிகர்கள், நோயிலிருந்து குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் இவர்களுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் பிரயாணி தன் பிரயாணத்தை முடித்துக் கொண்டதும், நோயாளியின் நோய் குணமானதும் விட்ட நோன்புகளை நோற்க வேண்டும். கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலூட்டும் தாய் இவ்விருவரும் நோன்பு நோற்பதினால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் ஆபத்து ஏற்படுமென்று பயந்தால் நோன்பை விட்டுவிடலாம், இவர்களும் குழந்தையை பெற்றெடுத்ததற்கு பிறகு அல்லது பாலூட்டியதற்கு பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். நோன்பு நோற்கவே முடியாத வயோதிகர்கள் மற்றும் நோய் குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு வீதம் உணவளித்தால் போதுமாகும். இவர்கள் விடுபட்ட நோன்புகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. அல்லாஹ் நன்கறிந்தவன்.

Monday, July 15, 2013

ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு

1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றவரல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  இன்னும் ஒரு அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)
3) நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)
4) நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)
5) நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்பிற்கும் உள்ள வித்தியாசம் ”ஸஹர் உணவு உண்பதுதான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)
விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது ”வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்” இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே, அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை கடைபிடிப்போமாக!

ரமளான் நோன்பின் சிறப்புகள்

1) ‘நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்’ ஆகவே, நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது. இன்னும் இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் ‘நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி’ என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை, அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) நோன்பு நோற்றவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
3) சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு ‘அர்ரய்யான்’ என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். ‘நோன்பாளிகள் எங்கே’ என்று அழைக்கப்படும். அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலால் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் (என) இரு சந்தோசங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
விளக்கம்: வணக்கங்களை அல்லாஹ் நம்மீது கடமையாக்கியது நாம் அல்லாஹ்விற்கு, கட்டுப்படுகின்றோமா இல்லையா? என்பதை சோதனை செய்வதற்குத்தான். வணக்கங்களை நாம் செய்வதினாலோ, அல்லது விடுவதினாலோ அல்லாஹ்விற்கு எந்த இலாபமோ, நஷ்டமோ கிடையாது. இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு வணக்கத்தை கடைமயாக்குவதின் மூலமாக ”எப்படிப்பட்ட தியாகத்தையும் அல்லாஹ்விற்காக நாம் செய்யத் தயாராக இருக்கின்றோமா” என்பதைச் சோதிப்பதற்கும்தான். அப்படிச் செய்பவர்களுக்கு கூலியாக, மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பைப் பொறுத்தவரை, மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது, பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும், இவைகளை வெறும் சடங்குக்காகச் செய்யக்கூடாது. வணக்கம் என்ற தூய எண்ணத்தோடு செய்ய வேண்டும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான். அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)
தக்வா (இறையச்சம்) என்றால், அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளைச் செய்தும், தடை செய்தவைகளை முற்றாக தவிர்ந்து நடப்பதாகும். ”தக்வாவின் உரிய தோற்றத்தை” நோன்பு நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. நோன்பாளி யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும், பசியுள்ளவராக இருந்தும், தன்னிடமுள்ள உணவை உண்பதில்லை. தாகமுள்ளவராக இருந்தும் எதையும் குடிப்பதில்லை. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றுவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடமையாக்கிய அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தினால்தான். இதுதான் ”இறையச்சத்தின் உண்மையான தோற்றமாகும்”. இத்தன்மை நோன்போடு முடிந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு வினாடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும். இந்த எண்ணத்தோடு வாழ்ந்தால்தான் தொழாதவர், நான் ஏன் தொழவில்லை? இத்தொழுகையைக் கடமையாக்கிய இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்து, தொழ ஆரம்பித்து விடுவார். பாவங்களில் ஈடுபடக்கூடியவர், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் என்னைத் தண்டிப்பான் என்று நினைத்து, அதை விட்டுவிடுவார். இதனால்தான் அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில், ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான். ஆகவே, அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்தும், தடை செய்தவைகளை முற்றிலுமாக தவிர்ந்து நடப்பதற்கு உறுதியான முடிவெடுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!
நோன்பில் இந்த உயரிய பண்பு இருப்பதினால்தான் அல்லாஹ் அதனை ஒரு தனிப்பட்ட வணக்கமாகக் கூறுகின்றான். ஹதீஸுல் குத்ஸியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களும் அவனுக்குரியதே” அது (நோன்பு) எனக்குரியது, அதற்கு நானே கூலிகொடுக்கின்றேன், (காரணம்) அவன் தன் இச்சையையும், உணவையும், குடிபானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான். எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்திச் சொல்வதற்குக் காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், இக்லாஸ் (மனத் தூய்மை) உடனும் நோற்கப்படுவதினால்தான். எனவே, நோன்பு விடயத்தில் அல்லாஹ்விற்கு நாம் அஞ்சுவது போன்று மற்ற எல்லா விடயங்களிலும், எல்லாக் காலங்களிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோமாக..!
யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கின்றாரோ, அதில் எந்தவித பயனும் இல்லை. ”யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டு விடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (புகாரி)
பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல், மற்ற எல்லாப் பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமளான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். உம்ராச் செய்யாதவர்கள் உம்ராச் செய்கின்றனர். குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்துவிடுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் இது போன்ற பல நற்செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு. ஏன் இந்த நற்பண்புகளை நோன்பு அல்லாத மாதங்களிலும் தொடரக்கூடாது? நோன்பு மாதத்தில் எந்த இறைவனை அஞ்சி இந்த நற்செயல்களில் ஈடுபட்டோமோ, அதே போன்று மற்ற மாதங்களிலும் ஈடுபடவேண்டும். அவன் நோன்பு அல்லாத மாதங்களில் நம்மை கண்காணிப்பதில்லையா? நோன்பு அல்லாத மாதங்களில் நாம் மரணிப்பதற்கு வாய்ப்பில்லையா? ஏன் நோன்பு மாதத்தோடு இந்த நல் அமல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்? சிந்தியுங்கள்! விடை கிடைக்கும். நல் அமல்களை, தொடர்ந்து செய்வதற்கு, அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக…!

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

1) ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ”நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா)
3) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ, அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ, அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)   4) நோன்பு மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு சமமாகும். ஆகவே, நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)
5) ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. இன்னும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)
விளக்கம்: ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹ் பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல் அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டதுதான் ரமளான் மாதமும், இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன. மற்ற மாதங்களில் செய்யும் அமல்களை விட இம்மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஒரு இரவு இருக்கின்றது, அது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. இம்மாதத்தில் அல்லாஹ்வின் அருள் அதிகம் இறங்குகின்றது, இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது, இம்மாதத்தில் அல்லாஹ் பாவங்களை அதிகம் மன்னிக்கின்றான். ”யார் ரமளான் மாதத்தை அடைந்தும் பாவம் மன்னிக்கப்படாமல் மரணித்தானோ அவனை அல்லாஹ் (தன் அருளை விட்டும்) தூரமாக்குவானாக!” என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்ய, நபி (ஸல்) அவர்கள் அதற்கு ஆமீன் கூறினார்கள். இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வளவு சிறப்புகளை உள்ளடக்கியதுதான் இம்மாதம். ஆகவே, யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ, இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகமதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவமன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவமன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்கியருள்வானாக!

Sunday, July 7, 2013

புனித ரமலானே வருக!

புனித ரமளான் மாதம் வந்துவிட்டது; வசந்தத்திற்கான வாய்ப்பு வந்துவிட்டது. வாழ்நாள் முழுவதையும் ஒரே நாளாகக் கருத முடியுமா?பல மடங்கு நன்மைகளைத் தரும் நாளும் மற்ற நாளும் சமமாக முடியுமா?

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு ரமளானின் நாட்களைப் புண்ணியமானதாக ஆக்கிக்கொள்வதும் சுரணையே இல்லாமல் இந்நாளையும் அந்நாளைப்போல் வீணாகக் கழிப்பதும் நம் கையில்தான் உள்ளது.

புனித ரமளானில் செய்ய வேண்டிய முதல்தரமான வழிபாடு உண்ணா நோன்புதான்.

உங்களில் அம்மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்! (2:185)என்பது இறைக்கட்டளையாகும்.

யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது நபிமொழியாகும். (புகாரீ)

மற்றொரு நபிமொழி இவ்வாறு கூறுகிறது: சொர்க்கத்தில் ரய்யான் எனும் ஒரு நுழைவாயில் உள்ளது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறுயாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். (புகாரீ)




அடுத்து ஐவேளை தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றல் மிகவும் முக்கியமானது. மூன்றாவதாக இரவுத் தொழுகை. இதில் தராவீஹ் மற்றும் தஹஜ்ஜுத் அடங்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவர் முன்புசெய்த பாவங்கள் மன்னிக்கப்படும். (புகாரீ)

அடுத்து திக்ர் மற்றும் தஸ்பீஸ். இதில் அநேக பலன்கள் உண்டு. முக்கியமாக,மனஅமைதியும் தெளிவும் கிடைக்கும்.
திருக்குர்ஆன் கூறுகின்றது:

அல்லாஹ்வை நினைவுகூர்வதால் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலையையும் தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலையையும் ஒத்திருக்கிறது. (புகாரீ)

மற்றொரு ஹதீஸில், “தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவன்மீது கொண்ட அச்சத்தால்) கண்ணீர் சிந்தியவருக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷுடைய நிழலில் இடம் கிடைக்கும் என்று நபியவர்கள் தெரிவித்துள்ளார்கள். (புகாரீ)

அடுத்தது துஆ. பாவமன்னிப்பு (தவ்பா) நல்வழி (ஹிதாயத்), வாழ்க்கையில் வளம் (பரகத்), வாழ்வாதாரம் (ரிஸ்க்), ஆரோக்கியம் (ஸிஹ்ஹத்), கல்வி (இல்ம்) முதலான தேவைகளை முறையிட்டு அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். வேண்டுதல் ஏற்கப்படும் நாள் என்பதால், நல்ல பலன் கிடைக்கும்.

புனித ரமளான் மாதத்தில் அதிகமதிகம் குர்ஆன் ஓத வேண்டும். வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். (புகாரீ)

அவ்வாறே, ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அதிகமாக வாரிவழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். தொடர்ந்து வீசும் மழைக்காற்றைவிட அதிகமாக நல்லதை வாரிவழங்குவார்கள். (புகாரீ)

எனவே, ரமளானில் ஸகாத், ஸதகா, இஃப்தார் உணவு, ஸஹர் உணவு போன்ற தர்மங்களை இயன்றவரை அதிகமாகச் செய்ய வேண்டும். பேச்சைக் குறைத்து,பொய், கோள், புறம் ஆகியவற்றைக் கைவிட்டு நாவைப் பேணிக்கொள்ள வேண்டும்.

யார் (நோன்பு நோற்றுக்கொண்டு) பொய்யான பேச்சையும் அதன்படி செயல்படுவதையும் கைவிடவில்லையோ அவர் (வெறுமனே) தமது உணவையும் பானத்தையும் கைவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என்பது நபிமொழி. (புகாரீ)

புனித ரமலானே வருக!

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது

நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.

கடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து, பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.

இந்தப் பக்திப் பரவச நிலை புனித ரமலான் ஒரு மாதத்தில் மட்டுமின்றி தினந்தோரும் இருப்பதுபோல் அனைவரின் உள்ளத்திலும் இவ்வுணர்வு குடிகொண்டு, அதன் மூலம் வெளிப்படும் வணக்க வழிபாடுகளும் இதர அன்றாடச் செயல்பாடுகளும் அமைந்து விட்டால், இம்மைக்கும் மறுமைக்கும் நன்றன்றோ எனும் ஆவலும் எண்ணமும் நமக்கு ஏற்படுகின்றது. இந்நிலையை நமது வாழ்க்கையில் ரமலானில் மட்டுமின்றி ரமலானுக்கு பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் அருள் புரியவேண்டும்.

இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்,

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட (ஈமான்) எனும் இறை நம்பிக்கை' என்ற அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாது. ஏனெனில் ஈமான் என்ற இணையற்ற அருட்கொடை இல்லா விட்டால் நாம் பெற்றுள்ள இதர எந்த வளமும் உண்மையில் அருட்கொடையில்லை எனலாம்.

இறை நம்பிக்கை இல்லாத நிலையில் செல்வம் எனும் அருட் கொடை அதிகமானால் அவனை அது வழி கேட்டிற்கும் தீமைகளுக்கும் இட்டு சென்று விடும் வாய்ப்புகள் உண்டு. கல்வி மற்றும் அறிவு எனும் அருட்கொடைகள் ஆக்கத்தையும் அழிவையும் பிரித்துணராமல் கேடாக அமைந்திட வழிவகுக்கும் அபாயம் உண்டு. உடல் அழகு, வலிமை, திறமை, ஆற்றல்கள், அதிகாரம் போன்றவை ஈமான் எனும் இறை நம்பிக்கையில்லாத நிலையில் கிடைக்கப் பெற்றால் அவற்றைத் தவறான வழியில் மனோ இச்சையின்படி ஈடு படுத்திட அதன் மூலம் தமக்கும் தம்மை சுற்றியிள்ளோருக்கும் கேடும் இழப்பும் ஏற்படுத்திட வாய்ப்புகள் அதிகம். ஈமான் (இறைநம்பிக்கை) மற்றும் இறையச்சம் என்பதுதான் உண்மையில் அருட்கொடை.

இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப) வாழ்வேயன்றி வேறில்லை. (அல் குர் ஆன் 3 : 185)

இம்மை எனும் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே சதம் எனும் போக்கில் அதனைப் பெருக்கும் பேராசையில் தமது சொந்த ஆசாபாசங்களுக்கும் மனோயிச்சைகளுக்கும் தமது குடும்பத்தினர்களுக்கும் வாரிசுகளுக்கும் என்று அயராமல் உழைத்து மனிதன் சம்பாதிக்கும்-செலவிடும்-சேமிக்கும் ஒவ்வொன்றிலும் மறுமை வாழ்க்கையை மறந்து, மனம் போன போக்கில் இறை வரம்புகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால், மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும் இன்பங்களும் பேரும் புகழும் சகல துறைகளில் வெற்றிகள் பெற்றாலும் அது உண்மை வெற்றியாகாது. நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற்கண்ட இறைவசனத்தை எந்நேரமும் மனதில் நிறுத்தி இவ்வெற்றியை பெற்றிட நமது அயராத முயற்சிகள் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் மூலம் செயல் படவேண்டும்.

"எவர் ஒருவர் ரமலான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:

"நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது 'ஆமீன்" என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர்.

 இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள், நான் ஆமீன் என்றேன். 'உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன். 'தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)

மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கவும்.

அல்லாஹ் அல் குர்ஆனில்,

 நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். ( அல் குர் ஆன் 4 : 56 ) என்று எச்சரித்துள்ளதையும் மேலும் நரகத்தின் கொடுமையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் தப்பிடும் விதமாக வாழவேண்டியதை நினைவூட்டும் ஓர் அறிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.

திண்ணமாக, நரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது - வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக! அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை - கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே!) அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று. (அல் குர் ஆன் 78:21-30)

நபிமொழி

"இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள்! முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102)வசனத்தை நபி(ஸல்) ஓதினார்கள். பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்!? என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா

நரகவாசிகளில் இலேசான தண்டனைக்குரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும். அதனால் மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நீங்கள் மூட்டும் நெருப்பு நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

இவற்றை நினைவில் எந்நேரமும் நிறுத்தி அல்லாஹ் எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் இணைவைத்தல், (4 : 48,116) வட்டி வாங்குதல் (2 : 275-278), போன்றவற்றை உடன் கைவிட வேண்டும், மேலும் நரகத்தின்பால் நெருக்கம் ஏற்படுத்தும் இதர எல்லாவிதமான பாவமான சொல், செயல்களில் இருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் பொருள் ஈட்டலிலிருந்தும் தம்மை முழுமையாக தடுத்துக் கொள்ள உறுதி பூண்டு,(17 : 28-31) நிகழ்ந்து விட்டவைக்கு வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளை கைவிட்டு நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும். குர்ஆனில் வசனங்களைப் பார்க்க.

மேலும் அல்லாஹ்வின் உபதேசம் தொடர்கிறது:

முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6)

மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத பயங்கரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நம் பொறுப்பில் உள்ள நம் குடும்பத்தினரும் முழு மனித சமுதாயமும் மீட்சியையும் பாதுகாப்பும் பெறக்கூடிய விதத்தில் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும் இஸ்லாமிய இறை வரம்பினுள்ளும் அவற்றின் அடிப்படைக்குச் சிறிதும் மாற்றமில்லாத விதத்திலும் மன உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட முனைய வேண்டும்.

உதாரணமாக ஒரு சிலர் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மைபெற முறையாக முயல்வதும் இறைவனைத் வேண்டி தொழுவதும் தொழுது முடித்த பின்னர் நீண்ட நேரம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

இன்னும் சிலர் அவசர அவசரமாக தொழுது முடித்தவுடன், பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அல்லது துவா எனும் இந்த பிராத்தனையே செய்யாமல் வெளியேறி விடுகின்றனர். நபி (ஸல்) அவர்கள், "அத்துவாஉ ஹுவல் இபாதா - துவா என்பதே ஒரு வணக்கமாகும்" என்று கூறியுள்ளார்கள் என்பதை நாம் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நினைவில் வைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, நமது அனைத்துத் தேவைகளையும் கேட்க வேண்டும். நமது தேவைகளை நிறைவேற்ற வல்ல ஒருவன் அவனே! நாம் கேட்டும் கேட்காமலும் நமக்கு எல்லாம் வழங்கிய, வழங்கிடும் கருணையாளன் அவனே! கஷ்டங்கள், நோய்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் நீக்க வல்லவன் அவன் ஒருவனே! என்றும், அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்து விட்ட குற்றங்கள், குறைகள், பாவங்கள் என்று எல்லாவற்றையும் மன்னித்தருளக் கூடியவன் அவனே! என்றும் முறையாக உள்ளத்தால் நம்பி, எல்லாம் வல்லவனாகிய அல்லாஹ்விடம் மனமுருகி சமர்பித்து நாமறிந்த மொழியில் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் ஈருலக வெற்றியையும் ஈடேற்றத்தையும் கேட்க வேண்டும். மிகப் பெரும் இழப்பும் வேதனையுமாகிய நரக நெருப்பில் இருந்து பாது காப்பும் தேடவேண்டும்.

எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)

அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)

அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.

நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்) அவர்கள் வழியில் முயல வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்' இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாப்' இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாப்' இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.

நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம். அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள், வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.

இதர  எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான  கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும். ஆனால் சிலர் இந்த லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிகு இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமலானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பி, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்கள் வாழ்க்கையில் இது 21,23,25,27,29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை நமது மறுமைக்காக கவனத்தில் கொள்ள வேண்டும். நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:

லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்று தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.

இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!

அல்லாஹ் நமக்குப் புனித ரமலானின் சிறப்புமிகு நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும் நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும் நமக்கு பாவமன்னிப்பளித்திடவும் நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும் புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும் அதன் மூலம் நமது இம்மை மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலான் முதல் என்றென்றும் பிராத்திப்போமாக.

நன்றி:சத்திய மார்க்கம்.

ரமலானிலும் அல்லாஹ்வுக்காக இணையதளத்தில் பாடுபடும் ஒவ்வொரு சகோதரருக்கும் அல்லாஹ்தஆலா ரஹ்மத்தையும், பரக்கத்தையும், ஜன்னத்தையும் அருள் புரிவானாக. ஆமீன்.