Pages

Thursday, October 4, 2018

இவர் தான் முஹம்மத்!!

இவர் தான் முஹம்மத்!!

ஒரு திரைப்படம் இன்று உலகத்தையேஉலுக்கிவிட்டிருக்கின்றது.
உலகெங்கும் 800க்கும் மேற்பட்ட நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. இந்த நாள் வரை ஐம்பது பேர் உயிரிழந்திருக்கின்றார்கள்.

எல்லாமே யாருக்காக? எல்லாமே எதற்காக?

முஹம்மத் நபிக்காகத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும் கொந்தளிப்புகளும்.

முஹம்மத் நபி என்றால் யார்? என்ன அது, 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் வாழ்ந்த வாழ்க்கை வழிகாட்டியா? இத்துணை நூற்றாண்டு-கள் உருண்டோடி விட்ட பிறகுமா, மக்கள் அவரை மறக்காது இருக்கின்றார்கள்? இத்துணை ஆண்டுகளுக்குப் பிறகுமா மக்கள் அவருக்காக தங்களின் உயிரையே கொடுக்கின்றார்கள்?

யார்தான் அவர்? எப்படிப்பட்டவர் அவர்? அவர் செய்த சாதனைகள் என்ன? அவர் சந்தித்த சோதனைகள் என்ன? போன்ற கேள்விகள் இன்று உலகெங்கும் மக்கள் மத்தியில் உரத்துக் கேட்கப்படுகின்றன. உங்களுக்குள்ளும் இந்தக் கேள்விகள் எழுந்திருக்கலாம்.

அந்தக் கேள்விகளுக்கு விடைதான் இந்த மடக்கோலை.

யார் முஹம்மத் (ஸல்)?

இறைவனிடமிருந்து இத்தரணியில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப் போகின்ற உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்ட இறைத்தூதர்தாம் முஹம்மத் நபி(ஸல்). மனித குல மாணிக்கமாக, அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாக வாழ்ந்து சென்றவர்தாம் அண்ணல் நபிகளார்(ஸல்).

‘பணம், குலம், அழகு ஆகியவற்றைப் பார்த்து மணம் முடிக்காதீர்கள். மார்க்கத்தைப் பார்த்தே பெண்ணை மணம் முடித்துக் கொள்ளுங்கள்’ எனச் சொல்லி அமைதியானமணவாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்.

‘அரபி அல்லாதவரை விட அரபியோ, அரபியை விட அரபி அல்லாத-வரோ சிறந்தவர் அன்று. உங்களில் எவர் இறையச்சம் மிக்கவரோ அவரே உங்களில் சிறந்தவர்’ என்றும், ‘பிறரைக் கீழே வீழ்த்திவிடுபவன் பலசாலி அல்ல. கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே பலசாலி’ என்றும், ‘பொறாமை நற்செயல்களை அழித்துவிடும்’ என்றும் ஏராளமான நல்லுரைகளைச் சொல்லி அமைதியான சமூகத்திற்குப் பாதை அமைத்துக் கொடுத்தவர்.

‘மோசடி செய்பவன் என்னைச் சேர்ந்தவன் அல்லன்’ என்றும் ‘உழைப்-பாளியின் வியர்வை உலரும் முன் அவருக்குரிய கூலியை கொடுத்து-விடுங்கள்’ என்றும் கூறி, தூய்மையானபொருளாதார நடைமுறைகளுக்கு வித்திட்டவர்.

‘சமூகத்தின் தலைவன் சமூகத்தினரின் தொண்டனாவான்’ என்றும் ‘பதவியை விரும்புகின்றவர்களுக்கு பொறுப்புகளைத் தராதீர்’ என்றும் தீர்க்கமான கட்டளைகளைத் தந்து உன்னதமானஅரசியல் வாழ்வுக்கு வழிகாட்டியவர்.

உயர்குலப் பெண் திருட்டுக் குற்றத்துக்கு ஆளாகி தண்டனை-யும் விதிக்கப்பட்ட நிலையில் அவளுக்காக தோழர்கள் பரிந்து பேசியபோது ‘ஆளுக்கொரு நீதியைக் கடைப்பிடித்த சமூகங்கள் அழிந்து போனது உங்களுக்குத் தெரியவில்லையா? என் மகள் பாத்திமாவே தவறிழைத்தாலும் அவளையும் தண்டிப்பேன்’ எனச் சூளுரைத்து நீதிக்கு உறுதியளித்தவர்.

என அண்ணல் நபிகளாரின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அவரைக் குறித்து இறைவனே ஒரே வரியில் அறிமுகப்படுத்தி-யிருக்கின்றான்.
மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர். (திருக்குர்ஆன் 68 : 4)

உண்மை. முற்றிலும் உண்மை. அண்ணல் நபிகளார்(ஸல்) அழகிய குணங்களைக் கொண்டவராகத்தான் இருந்தார். இதற்கு அவருடன் வாழ்ந்த அவரின் மனைவியரும், தோழர்களுமே சான்றளித்திருக்கின்-றார்கள்.
அவற்றின் விவரம் வருமாறு:

அண்ணல் நபிகளாருடன் இருபத்தைந்து ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தியவர் அன்னை கதீஜா(ரலி). முதன்முதலாக இறைவ-னிடமிருந்து வசனங்கள் அருளப்பட்ட போது பயந்து வியர்த்து விதிர்த்து வந்த அண்ணல் நபிகளாரைப் பார்த்து அன்னையார்(ரலி) சொன்ன வாசகங்களைப் பாருங்கள்:
“இறைவன் மீது ஆணையாக! இறைவன் உங்களை எந்தக்-காலத்-திலும் வேதனையில் ஆழ்த்த மாட்டான். நீங்கள் உறவுகளை மதித்தும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றியும் வாழ்கின்றீர்-கள். கடனாளிகளின் கடன் சுமையைப் போக்குகின்றீர்கள். ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் உதவுகின்றீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். உண்மைக்கும் சத்தியத்திற்கும் தோள் கொடுக்கின்றீர்கள். துன்பத்தில் உழல்கின்ற மக்களின் துயர் துடைக்கின்றீர்கள்.”

அண்ணல் நபிகளாரின் இன்னொரு மனைவி அன்னை ஆயிஷா(ரலி). அண்ணல் நபிகளாரின் மரணம் வரை அவருடன் இருந்தவர். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். “அண்ணல் நபிகளார்(ஸல்) எவரையும் எந்தக் காலத்திலும் திட்டியதில்லை. தனக்குத் தீங்கிழைத்தவர்களை மன்னித்து அவர்களுக்கும் நன்மையையே செய்து வந்திருக்கின்றார். சொந்த விவகாரங்களில் எவரையும் பழிக்குப் பழி வாங்கியதில்லை. எந்தவொரு முஸ்லிமையும் அவர் சபித்ததில்லை. எந்தவொரு பணியாளரையும் பணிப்பெண்ணையும் கை நீட்டி அடித்ததில்லை.”

அண்ணல் நபிகளாருடன் 23 ஆண்டுகள் இறைவழியில் இணைந்து பாடுபட்ட உற்ற தோழர்தாம் அலீ பின் அபூதாலிப் (ரலி). அண்ணல் நபிகளாருடன் பயணத்திலும் போரிலும் வணக்க வழிபாட்டிலும் ஆலோசனைக் கூட்டத்திலும் இணைபிரியா நண்பராக வாழ்ந்தவர்தாம் அலீ பின் அபூதாலிப்(ரலி). அவர் கூறுகின்றார்: ‘அண்ணல் நபிகளார்(ஸல்) மென்மையானவர். இளகிய மனம் கொண்டவர். எந்தக்காலத்திலும் கடுமையாக நடந்துகொண்டதில்லை. மிகவும் பரந்த மனம் கொண்டவர். ஓங்கிப் பேசமாட்டார். எந்தக் காலத்திலும் அவருடைய நாவிலிருந்து கெட்ட வார்த்தைகள் வந்ததில்லை. எவருடைய குறையையும் துருவித் துருவி ஆராய்ந்ததில்லை. வீண் விவாதம், அதிக பேச்சு, பயனற்ற பொழுதுபோக்கு ஆகிய மூன்றிலிருந்தும் அறவே விலகியிருந்தார்.”

அண்ணல் நபிகளாரின் தோழர்களில் ஒருவர் அனஸ் பின் மாலிக் (ரலி). அண்ணல் நபிகளாரின் பணியாளராய் பல்லாண்டுகள் இருந்தவர்.
அவர் கூறுகின்றார்: ‘நான் அண்ணல் நபிகளாரின் பணியாளராகப் பத்து ஆண்டுகள் சேவையாற்றியிருக்கின்றேன். அவர் ஒரு நாள் கூட என்னைப் பார்த்து ‘சே..’ என்று கூட சொன்னதில்லை. அவர் சொன்ன வேலையைச் செய்ய மறந்துவிட்டாலும், அல்லது செய்யத் தவறிவிட்டாலும்கூட அவர் என்னைப் பார்த்து ‘ஏன் இப்படி நடந்து கொண்டாய்?’ என ஒரு வார்த்தை கேட்டது கிடையாது.’

அண்ணல் நபிகளாரின் அழைப்பை எதிர்ப்பதில் முன்னணியில் நின்ற அபூசுப்யான் ரோமப் பேரரசரிடம் அண்ணல் நபிகளாரைக் குறித்துச் சொன்னதாவது: ‘முஹம்மத் பொய் சொல்லி நான் பார்த்ததில்லை. அவர் எந்தக்காலத்திலும் கொடுத்த வாக்குறுதியை மீறியதில்லை. ஒப்பந்தத்தை உடைத்ததில்லை.’
இந்தச் சான்றுகள் தருகின்ற செய்தி என்ன?

இன்னொன்றையும் கேளுங்கள். அண்ணல் நபிகளார்(ஸல்) தம் வாழ்நாள் முழுவதிலும் ஒருவரைக் கூட கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக வரலாறு கிடையாது.

கைதிகளாகப் பிடிபட்டவர்கள், அடிமைகள், பணியாளர்கள், ஏழைகள் ஆகிய பலவீனமான மக்களிடமும் அவர் இஸ்லாத்தைத் திணித்ததில்லை. அண்ணல் நபிகளாரை வளர்த்துப் பாதுகாப்பு அளித்த அவருடைய பெரிய தந்தை அபூதாலிப் இறுதிவரை இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணித்தார்.

அவருடைய நெருங்கிய உறவினர்களில் பலர் இஸ்லாமியப் பிரச்சாரம் தொடங்கிப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இஸ்லாத்தில் இணைந்தவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைக்க அண்ணலாரிடம் அனுமதி கோரிய போது அதனை மறுத்தார்.

அதுமட்டுமல்ல, மக்கா நகரம் அண்ணலாரால் வெற்றி கொள்ளப்பட்டபோது, தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் துன்பங்கள் அளித்த மக்காவாசிகளை மனப்பூர்வமாக மன்னித்த மாண்பாளர் அவர்.

பகைவரையும் மன்னித்த அந்தப் பண்பாளரைப் பற்றி,
மென்மைக்கு அடையாளமாய் வாழ்ந்த அந்த உத்தமரைப் பற்றி,
இளகிய மனமும் ஒழுக்கசீலமும் படைத்த அந்த மாமனிதரைப் பற்றி,
கனிவும் கருணையும் கொண்ட,
வாழ்நாளில் எவரையும் பழி வாங்காத அந்த உயர்ந்த தலைவரைப் பற்றி இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமே என உங்கள் மனம் பரபரக்கின்றதா?

தொடர்பு கொள்ளுங்கள்:

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு & புதுச்சேரி
138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை - 600 012
Phone : 044 -2662 1101, Fax : 2662 0682
Tel : 044 -2662 1101, Fax : 2662 0682
Email : jihtnzone@gmail.com, 
Website : www.jihtn.org 



Sunday, September 16, 2018

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)

மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :
ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
யூதர்களுக்கு மாறு செய்வதற்காக ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத்தாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தும் அதிகம் நன்மையை ஈட்டித்தரும் அமலுமாகும். இந்த நோன்பை நோற்பவரின் முன் சென்ற வருடத்தின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். இது சம்மந்தமான ஹதீதுகள் பின்வருமாறு.
ஆஷுரா நோன்பின் சிறப்புகள்
1.ஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை. இந்த மாதத்தை (ரமழான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி,முஸ்லிம்)
2.இன்னும் ஒரு அறிவிப்பில்: ஆஷுரா நாளுடைய நோன்பின் சிறப்பை நபி (ஸல்) அவர்கள் தேடியது போன்று வேறு எந்த நாட்களின் நோன்பின் சிறப்பையும் தேடியதாக நான் பார்க்கவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி,முஸ்லிம்)
3.ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
4.ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) - குறிப்பு: மேல்கூறப்பட்ட ஹதீதில், முன் சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது சிறு பாவங்களையே குறிக்கும். பெரும்பாவங்களுக்காக தவ்பா செய்வது அவசியமாகும். இதுவே அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.
ஆஷுரா நோன்பு நோற்பது பற்றி ஆர்வமூட்டும் ஹதீதுகள்
1.நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்றிருப்பதை பார்த்து, இது என்ன? என வினவினார்கள். அதற்கு அவர்கள், மூஸா (அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் (ஃபிர்அவ்னிடமிருந்து) அல்லாஹ் காப்பாற்றிய ஒரு நல்ல நாளாகும் என்றார்கள், (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அந்த நாளில் நோன்பு நோற்று உங்களைவிட மூஸா (அலை) அவர்கள் விடயத்தில் நான் மிக தகுதியுடையவர் எனக்கூறி தானும் அந்த நோன்பை நோற்று அந்த நோன்பை நோற்கும்படி (தன் தோழர்களுக்கும்) ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில்: (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் நாங்களும் நோன்பு நோற்போம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்னும் ஒரு அறிவிப்பில்: அந்த நாளை கண்ணியப்படுத்துவதற்காக நாம் நோன்பு நோற்போம் என்றார்கள்.
2.நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி யார் நோன்பாளியாக காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பை தொடரட்டும், யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் இன்றைய தினத்தின் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும் என அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின் நோன்பு வைக்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். இன்னும் நாங்கள் பள்ளிக்கும் செல்வோம், கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்களில் யாரும் அழுதால் நோன்பு திறக்கும் வரை அந்த விழையாட்டுப் பொருளை அவர்களுக்காக கொடுப்போம் றுபைய்யிஃ பின்த் முஅவ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில்: அவர்கள் எங்களிடம் உணவு கேட்டால் அவர்களின் நோன்பை முழுமை படுத்தும் வரை அவர்களின் பசியை போக்கும் அளவுக்கு அவர்களுக்கு அந்த விழையாட்டுப் பொருளை கொடுப்போம் என்று வந்திருக்கின்றது.
3. (பின்வரும் அறிவிப்பை) மக்களுக்கு அறிவிக்கும்படி அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யாராவது உணவு உன்றிருந்தால் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும். யாராவது (இதுவரை) உண்ணவில்லையானால் அவர் நோன்பை நோற்கட்டும், காரணம் இன்றைய தினம் ஆஷுரா தினமாகும். (புகாரி, முஸ்லிம்)
4.ஆஷுரா தினம் யூதர்கள் கண்ணியப்படுத்தும் தினமாகவும் பெருநாளக கொண்டாடும் தினமாகவும் இருந்தது, ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
முஸ்லிமின் இன்னும் ஒரு அறிவிப்பில்: கைபர் வாசிகள் (யூதர்கள்) ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள், அதை பெருநாள் தினமாகவும் கொண்டாடுவார்கள். அவர்களின் பெண்களுக்கு ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அணிவிப்பார்கள். ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ரமழான் மாத நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பு பற்றிய நிலை
1.ரமழான் (நோன்பிற்கு) முன் ஆஷுர நோன்பு (அவசியமாக) நோற்கப்படக்கூடிய ஒன்றாக இருந்தது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் அதை நோற்றார்கள். விரும்பியவர்கள் அதை விட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)
2.ஆஷுரா நோன்பை குறைஷிகள் ஜாஹிலிய்யா காலத்தில் நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள், நபி (ஸல்) அவர்களும் ஜாஹிலிய்யா காலத்தில் அதை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அந்த நோன்பை நோற்றார்கள் அதை நோற்கும் படி மக்களுக்கும் ஏவினார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது ஆஷுரா நோன்பை விட்டுவிட்டார்கள். விரும்பியவர்கள் நோற்றார்கள், விரும்பிவர்கள் அதை விட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)
3.ஜாஹிலிய்யா காலத்து மக்கள் ஆஷுரா நோன்பை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் அதை நோற்றார்கள் விரும்பியவர்கள் அதை விட்டார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)
4.ஜாஹிலிய்யா காலத்து மக்கள் ஆஷுரா நோன்பை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ரமழானுடைய நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் அதை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆஷுரா தினம் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும், விரும்பியவர் அதை நோற்கட்டும் விரும்பியவர் அதை விடட்டும் என்றார்கள். (முஸ்லிம்)
5.ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் குறைஷிகள் ஆஷுரா நோன்பை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள், அன்றைய தினம் கஃபாவிற்கு திரையிடப்படும் தினமாக இருந்தது. (புகாரி)
6.இது ஆஷுரா தினமாகும், உங்களுக்கு அல்லாஹ் அந்த நோன்பை கடமையாக்கவில்லை, நான் நோன்பு நோற்றிருக்கின்றேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும் விரும்பியவர் நோன்பை விடட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என முஆவியா (ரலி) அவர்கள் கூறிய செய்தியை ஹுமைத் இப்னு அப்துர்ரஹ்மான் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி,முஸ்லிம்)
7.ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பை நாங்கள் நோற்கும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது அவர்கள் அதை ஏவவுமில்லை தடுக்கவுமில்லை நாங்கள் அதை நோற்றுக் கொண்டிருந்தோம் என கைஸ் இப்னு ஸஃது இப்னு உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)
குறிப்பு: மேல் கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து விளங்கக்கிடைக்கும் விடயம், ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு நோற்பது அவசியமான ஒன்றாக இருந்தது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் அவசியம் என்பதுதான் எடுபட்டதே தவிர அது நோற்பது சுன்னா என்பது எடுபடவில்லை, நபி (ஸல்) அவர்கள் ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பை விட்டுவிட்டார்கள் என்பதின் கருத்து, அது அவசியம் என்பதைத் தவிர சுன்னத்து என்பதையல்ல. அது இதுவரையும் சுன்னத்தாகவே இருக்கின்றது என இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல்பாரி என்னும் தனது நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
1.அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
2.ஆஷுரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
3.ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒரு நாள் அல்லது அதற்கு பின் ஒரு நாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்னறார்கள். (அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி,)
இந்த ஹதீதின் தரம்: இந்த ஹதீது மேல் கூறப்பட்ட கிரந்தங்களிலும் இன்னும் பல கிரந்தங்களிலும் பதியப்பட்டிருந்தாலும் இந்த ஹதீது பலவீனமானதாகும். இதில் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் என்பவர் இடம் பெற்றிருக்கின்றார், இவர் கடுமையான மனனக் குறையுள்ளவரும் இவர்பற்றி அஹ்மத் இப்ன் ஹன்பல் மற்றும் யஹ்யா இப்னு மஈன் (ரஹ்) அவர்களும் இவரை பலவீனர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
இன்னும் தாவூத் இப்னு அலி என்பவரும் இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுகின்றார் அவரை இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் இவருடைய ஹதீதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனக்கூறுகின்றார்கள்.
ஆகவே ஆதாரப்பூர்வமான “எதிர்வரும் வருடம் நான் இருந்தால் ஒன்பதையும் சேர்த்து நோற்பேன்” என்ற ஹதீதை ஆதாரமாக வைத்து ஒன்பதாம் நாளையும் பத்தாம் நாளையும் நோன்பு நோற்பதே சிறந்த முறையாகும். அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.
முஹர்ரம் மாத்தின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது மாத்திரமே நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்த வழிமுறையாகும். அதையே முன்சென்ற நபி மொழிகளில் பார்த்தோம். இதை தவிர்த்து அன்றைய தினத்தில் விஷேட வணக்கங்கள் புரிவது மற்றும் உணவுப்பண்டங்கள் செய்து ஏழைகளுக்கு தர்மமாக கொடுப்பது பள்ளிகளுக்கு அனுப்புவது போன்ற காரியங்கள் அனைத்தும் பித்அத்தாகும். அதே போன்று ஷீஆக்கள் அன்றைய தினத்தை துக்க தினமாக கொண்டாடுவதும் பித்அத்தாகும். இவைகள் அனைத்தையும் தவிர்த்து நபிவழி பேணுவோமாக!